சின்ன சின்ன ஞானங்கள்

’ஞானம்’ எப்படி சின்னதாக இருக்க முடியும் என்பதிலேயே இந்த புத்தகம் ஒரு குறுகுறுப்பை கொடுக்கிறது. ‘சின்ன சின்ன ஞானங்கள்’ நாராயண குரு மரபு வழி தோன்றல் குரு நித்ய சைதன்ய யதி அவர்கள் மலையாளத்தில் எழுதிய நூல் – தமிழில் மொழியாக்கம் யூமா வாசுகி அவர்கள்.

குழந்தைகளின் தேக ஆரோக்கியத்தை கல்வி பெருமிதத்தை முன்னிலைப்படுத்தும் சூழலில் அவர்களது ஆன்ம ஆற்றலை போற்றவும் ஊக்குவிக்கவும் உதவும் நூல். குரு நித்யா அவர்களின் நூல் அறிமுகவுரையே சுவாரஸ்யமாக இருந்தது. குழந்தைகளுக்கு தானே அப்போ ’கொஞ்சம் விஷயங்கள்’ சொன்னால் போதும் என்று தொடங்க, அதுவே பெரிய விஷயங்களாக வந்துவிட, அதற்காக குழந்தைகளின் அம்மா, அம்மா என்றால் அப்போ பாட்டியும் தான், பின் ஆசிரியர்கள் என்று தொடர்ந்து ‘குழந்தைகளுக்கும் குழந்தைகளோடு இருப்பவர்களுக்கும்’ என்று அனைவருக்குமான புத்தகமாக உருப்பெற்றது.

ஆன்மாவிற்கு அன்பே வலிமை என்று தொடங்குகிறது. அன்பேன்னும் சரடே பிரதானம் என்றும், மனதின் உணர்ச்சிகளையும் ஆற்றல்களையும்,  கருனை, சுதந்திரம், ஜீவகாருண்யம், பச்சாதாபம், பற்று பகட்டு, நகைச்சுவை, கற்பனை, மரணம், மோட்சம் என்று அனைத்தையும் பக்குவமாக சுருக்கமாக பேசுகிறது. பிரசங்கமாக அறிவுரையாக இல்லாமல் இயல்பாக பேசியிருப்பது தான் தனி சிறப்பு. புத்தகத்தை பொறுத்தவரை அதன் வடிவம் மற்றும் சாரத்தை இதற்கு மேல் சுருக்கி சொல்லவிடமுடியாது. 

குழந்தைகளுக்கு குழந்தைகளோடு இருப்பவர்கள் சொல்லவேண்டியது, குழந்தைகளுக்கு இப்படியான சுற்றத்தையும், சூழலையும் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது, வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பது, கற்பனை ஆற்றலை வளர்ப்பது, தனி திறமைகளை அறிய உதவுவது, உளவியல் காயங்கள் ஏற்படாமல் தவிர்ப்பது, குழந்தைகள் அவர்களே வாசித்து புரிந்துக்கொள்வது என்று பல கோணங்களில் அனுகலாம்.

குழந்தைகளிடம் அன்பையும் பண்பையும் தொடர்ந்து பேசும் சமூகம் அவர்களிடத்தில் மரணம் மோட்சம் என்பதை பற்றி குறைவாகவே பேசுகிறது. ஒரு விதத்தில் சமநிலை தவறுமிடந்தான் இது என்றாலும், அதை பக்குவமாக சொல்லவேண்டிய அவசியம் காரணமாக அதிகம் பேசுவிதில்லை. இந்நூலில், மரணம் என்றால் என்ன என்ற கேட்கும் சிறுமிக்கு, ‘இப்போ இந்த பிஸ்கட் யதியின்டே ஐக்கியமாகி’ என்று ஒரு பிஸ்கட்டின் மரணத்தை, நாடக உரையாடல் போல எடுத்துரைப்பது அழகு. சிறுமி அடுத்தாக, ஒரு பழத்தை எடுத்து இதற்கும் காலம் வந்துவிட்டது நித்யத்திடம் கரையட்டும் என்று தருகிறாள், என்பது தான் அதனினும் அழகு! நாம் கவனிக்கவேண்டிய இடம் இது தான், குழந்தைகள் அவர்கள் பால்யத்திலேயே மரணம் என்பதை ‘இல்லாததின் வலி’, ‘இல்லாமை’ , ‘சோகம்’ என்று தான் புரிந்துகொள்கிறார்கள். ஆனால், இங்கே மரணம் ஒரு இயல்பாக ஒரு சுழற்சியாக அறிந்துக்கொள்ள வாய்ப்பு அமைகிறது. இவ்வாறாக, ‘சின்ன சின்ன’ ஞானங்கள் என்று சொல்லிக்கொண்டாலும் அரசமர விதை இந்த சின்ன வடிவ புத்தகம்.

எப்படியோ மரணத்தையாவது ஒரு சோகமானதாக காட்டிவிடுகிறோம், மோட்சத்தை எப்படி தான் நாம் அறிமுகம் செய்வது? அதற்கு ‘மோட்சம்’ என்ற தலைப்பில், செயலில் கரைந்துவிடுவது என்று சொல்லப்படுவதை எடுத்துக்கொள்ளலாம். மனதிற்குள் உடனடியாக நினைவில் வந்தது, ‘கல்வி’ என்னும் சிறிய நூலில் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் ‘மனம் ஒடுங்குதல்’ தலைப்பில் ஒரிடத்தில், துரோனர் அர்ஜூன்னிடம் கற்பிக்கும் உரையாடல் வழியாக செயலில் கரைவதை எடுத்துரைப்பார். ‘’துரோனர் அர்ஜூனனிடம் என்ன தெரிகிறது என்று கேட்கையில், அர்ஜூனன் கி…ளி… என்ற சொல்கிறான், இன்னும் என்ன தெரிகிறது என்று கேட்கிறார், கி……..ளி……. என்ற சொல்கிறான், இன்னும்?? இப்பொது அர்ஜூனனிடமிருந்து எந்த பதிலும் இல்லை, உடனே துரோனர் எய் அம்பை என்றிகார்!’’

செயல் அற்று துறப்பது மட்டும் அல்ல, செயல் ஆற்றி கரைவதும் மோட்சத்திற்கான வழி. ஜென்ம தொடர்ச்சி ஒரு நம்பிக்கை; அதிலிருந்து விடுபடுவது மோட்சம். அதற்கான ஒரு வழி, வினைப்பயண் இல்லாமல் செயலாற்றுவது. 

’கணக்கிடம் பிணக்கு’ தலைப்பில், இத்தனை லிட்டர் கொள்ளளவு கொண்ட பானையில் மூன்று துளைகளிட்டு, அதில் இத்தனை லிட்டர் தண்ணீர் ஊற்றினால், எத்தனை நிமிடங்களில் பானை காலியாகும். இப்படி கேள்வி கேட்கப்படும் போது, ஓடிப்போய் அந்த பானை துளைகளை அடைத்தால் என்ன என்று தோன்றும், என்பதை படிக்கையில் புன்னகையை தவிர்க்க முடியாது. இங்கே உலக கல்வி ஏற்படுத்தும் ஒவ்வாமையையும் அதை புரிந்துகொண்டு தொடரவேண்டிய நிதானமும் அவசியமும் சொல்லப்படுகிறது. வாசிப்பை ஊக்கப்படுத்தும், கற்பனையை ஊக்கப்படுத்தும், தனி திறமையை கண்டுக்கொள்ள உதவும் கூடங்களாக பள்ளி சாலைகள் இருக்க வேண்டும் அவசியம் புரியும். 

அதே போல் மற்றொரு தலைப்பில், ருஷ்யாவில் குழந்தைகளுக்காக இயங்கும் கலைக்கூடங்கள் பற்றிய அறிவுரையும், ஆஸ்திரேலியாவில் அறிமுகமாகும் சிறுமிகளின் மேடை நிகழ்ச்சியும் என்று சில உதாரணங்கள் கூறி, இந்திய குழந்தைகளுக்கு அவர்கள் திறமைகளை வளர்த்தெடுக்க நாம் செயலாற்றாமல், மாறாக நமக்கு நேரமில்லை, பிற முக்கிய வேலைகள் என்று இவற்றை கவனிக்காமல் இருப்பதையும் குறிப்பிட்டு பேசுகிறார்.

பெற்றோர்கள்/ஆசிரியர்கள் அவர்களது பிள்ளைகளிடம், உன்னால் முடியும் என்று சொல்லும் போதும், உன்னால் முடியாது என்று சொல்லும் போதும், பிள்ளைகள் செயலை செய்துவிட வேண்டும் என்று தான் இருக்கும். உன்னால் முடியாது என்ற அவமானத்தை எதிர்மறையாக கருதி, என்னால் முடியும், செய்துவிடுவேன், என்று முயற்சித்தால் செய்து முடிக்கமுடியும். மாறாக, என்னால் முடியாது, என்பதை அடையாளமாக ஏற்றுக்கொண்டுவிடுகிறார்கள் என்றால், அது ஆறாத உளவியல் காயங்களாக மாறிவிடுகிறது என்பதை கவனிக்க வேண்டும். அதிகப்படியான வன்முறை நம் வார்த்தைகளால் தான் ஏற்படுகிறது என்பதை உணரவேண்டும்.

குழந்தைகள் போட்டி, பொறாமை, சுயநலம் பாராட்டும் குணங்களை அவர்கள் சேர்ந்து இருக்கையில்  வெளிப்படையாகவே தெரிந்துக்கொள்ளலாம் ஆனால் அதன் பின்னும் இருக்கும் கருனை, பாசம், அன்பு வெளிப்படையானவை அல்ல என்பது மிக முக்கியமான ஒன்றாக தோன்றியது. இன்றைய சூழலில் வீட்டிற்கு ஒரே குழந்தை என்னும் போது இன்னும் கூடுதல் கவனம் தேவை.

பிறர் உன்னிடம் உன்னை தான் பிரதிபலிக்கிறார்கள் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். அந்த பிரதிபலிப்புகளை கையாளுவது அதன் மூலம் நமக்கான சூழலை அமைத்துக்கொள்வது நம் கையில் தான் இருக்கிறது என்பதை குழந்தைகள் அறிய வாய்ப்பளிக்கவேண்டும்.

குழந்தைகள் அவர்களே படித்து புரிந்துகொள்வேண்டிய தலைப்பாக ‘கொஞ்சம் விஷயங்கள்’ மற்றும் ‘காகாவும் இராஜாவும்’ பார்க்கிறேன். ‘கொஞ்சம் விஷயங்கள்’லில் குரு நித்யா அவர்களது கூறும் உதாரணம் சிறப்பு, இந்தியாவில் ஆன்மிக குரு வருகிறார் என்றால் உபசாரங்கள் தூக்கலாக வரவேற்பு இருக்கும், ஆனால் குரு அறிவுருத்தும் கருத்துகளை கேட்க நிற்காமல் சபை கலைந்துவிடும்! அதே சமயம் மேற்கத்திய நாட்டில் வரவேற்பு குறைவாகவும் கருத்துக்கள் பரிமாற பரிமாற அதிகம் கவனிக்கப்படும். சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிரபல்யமான ‘அன்பார்ந்த சகோதர சகோதிரிகளே…’ நினைவுபடுத்த வேண்டிய அவசிமில்லை தான்.  எது பற்று எது பகட்டு என்பதை தெரிந்துக்கொள்வது நன்று. 

‘காகாவும் இராஜாவும்’ படிக்கும் குழந்தைக்கு வயதிற்கு ஏற்ப சிந்தனையை உணர்ச்சிகளை புரிந்துக்கொள்ள உதவும் கதை. காகாவின் பார்வை, சிறுமியின் பார்வை அவர்களுக்கு இடையில் இருக்கும் பரஸ்பரம் நட்பு. அதிகாரங்கள் கிடைக்கப்பெற்ற அரசனின் பார்வை என்று மூன்று கோணங்கள். ஜீவகாருண்யம் வெளிப்படும் இடமும் அரசனின் ஆணவம் மட்டுப்படும் இடமும் என்று எடுத்துரைத்து முடிவடைகிறது புத்தகம்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டியது, குரு நித்யாவும், யூமா வாசுகி அவர்களும், எழுத்தாளர்கள் வரிசையும் புத்தக அறிமுகமும் கொடுத்திருக்கிறார்கள். எந்த புத்தக அறிமுகமும் இல்லை இலக்கிய வாசனையும் இல்லை ஆனால் தங்கள் குழந்தைகளுக்கு அந்த இடத்தை நிரப்ப விரும்பினால், இந்த புத்தகத்தை அவசியம் உடையதாக்கிக்கொள்ளவும். குழந்தைகளுக்கு வாசிக்க ஊக்கமளிக்கவும். 

நினைவிருக்கட்டும் – ஒரு நூல் இன்னொரு நூலை ஈர்க்கும் சக்தியுடையது. குழந்தைகள் அப்படி வாசிக்க தொடங்கி வரிசையின் பாதியில் என் தேர்வு இவை இல்லை என்றாலும் அது சிறந்த மாற்றமே இப்பொது அவர்களே அவர்கள் வாசிப்பு இரசனைக்கு ஏற்ப தேர்ந்தேடுக்கிறார்கள் என்பது அத்தனை சிறப்பு தான் இல்லையா?

இணை வாசிப்பிற்காக – இந்த நூலுடன் ‘கல்வி’ மற்றும் ‘ஜெ சைத்தன்யாவின் சிந்தனை மரபு’ நூலையும் சேர்த்துக்கொண்டேன். ‘கல்வி’ நூல் – குழந்தைகளின் இயல்பான ஆன்ம ஆற்றல்களான, படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் அடிப்படையில் எப்படியான கல்வி அவர்களை பண்படுத்தும் என்பதை அறிவுருத்துகிறது.

புத்தகம் – http://thannaram.in/product/chinna-chinna-gnanangal/

Leave a comment